சூரப்பா தமிழக பொறியியல் கல்லூரியை உலகத்தரத்திற்கு உயர்த்த முனைந்தவர்-கமல்ஹாசன் திடீர் ஆதரவு

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா தமிழக பொறியியல் கல்லூரியை உலகத்தரத்திற்கு முனைந்தவர் என்று கமல்ஹாசன் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். மக்கள் நீதிமய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியதாவது:-

சூரப்பாவிற்கு ஆதரவு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது தமிழகத்தில் இதற்கு தகுதியானவர்கள் இல்லையா என்ற கேள்வியை நாம்தான் எழுப்பினோம். அந்த கேள்வியில் இப்போதும்மாற்றம் இல்லை. ஆனால், வந்தவரோ வளைந்துக்கொடுக்காதவர், அதிகாரத்துக்கு முன் நெளிந்துக்குழையாதவர். தமிழக பொறியியல் கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும் என முனைந்தவர். பொறுப்பாளர்கள் நம் ஊழல் திலகங்கள், வளைந்துக் கொடுக்கவில்லையென்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம். எவனோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு எழுதிய மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள்.
விசாரித்துவிட்டீர்களா?

விசாரித்துவிட்டீர்களா?
முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களை பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா?
உயர் கல்வி அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டுத்தான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என பாலகுருசாமி குற்றம் சாட்டினாரே அளித்தாரே விசாரித்துவிட்டீர்களா? அத்தனைத்துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே அதை விசாரித்துவிட்டீர்களா?

சும்மா இருக்கமாட்டேன்
தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை, கரைவேட்டிகள் இங்கும் மூக்கை நுழைப்பது ஏன்? மதிப்பெண்களை கொடுத்து மாணவர்களை வளைக்க பார்க்கிறார்களா? சூரப்பாவின் கொள்கை நிலைப்பாடு அரசியல் செயல்பாடு குறித்து நமக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால் ஒருவன் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால், நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். இது ஒரு கல்வியாளருக்கும் அரசியல்வாதிக்குமான பிரச்சினை இல்லை. நேர்மையாளர்களுக்கும், ஊழல்வாதிகளுக்குமான போர். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் உன் வாழ்க்கையை அழிப்போம் என சூரப்பாவுக்கும் அவர்போல் பணியாற்றுபவர்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை.

விரட்ட வேண்டும்
சகாயம் தொடங்கி சந்தோஷ்பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் பெரிது. இதை இனிமேலும் தொடர் விடக்கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் இங்கு உருவாக விடக்கூடாது. இந்த ஊழல் திலகங்களை ஓட ஒட விரட்ட வேண்டும். வாய்மையே வெல்லும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். சூரப்பா மீது எழுந்துள்ள ஊழல் புகார் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version