இது எனக்கான ஆதரவு இல்லை: கமலுக்கு நன்றி சொன்ன சூரப்பா

தனக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நன்றி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு எதிரான ரூ.200 கோடி ஊழல் புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், தான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை எனவும், ஒரு பைசா கூட லஞ்சமாக பெற்றதில்லை என்றும் சூரப்பா விளக்கம் அளித்தார்.
ஆவணங்களை அழிக்காமல் இருக்க சூரப்பாவை இடைநீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.


சூரப்பாவிற்கு எதிரான விசாரணையை கலையரசன் ஆணையம் துவங்கிவிட்டது.‌ சூரப்பா அப்பழுக்கற்றவர் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.


இதனிடையே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஊழலுக்கும் நேர்மைக்குமான இந்த போரில் கமல்ஹாசனான நான் நேர்மையின் பக்கம் இருக்கிறேன். நேர்மையாளர்கள்  வாய்மூடி இருக்காமல் ஊழலை எதிர்த்துப் பேச வேண்டும். இனி ஒரு நம்பி நாராயணன் உருவாகக் கூடாது என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூரப்பா.

என்னுடைய நேர்மை, அர்ப்பணிப்பு, கல்வித்துறைக்கான எனது சேவையை கருத்தில் கொண்டு ஆதரவளிப்பது என்பது எனக்கான ஆதரவு அல்ல, இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான ஆதரவு என்றார்.
மேலும், “நான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் எனக்கு நற்பெயரே உள்ளது. என் மீதான புகார் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை” என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version