நமது நாட்டின் பொருளாதார நிலைமை மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அதை மீட்க வழி தேடுங்கள் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து, நேற்று வீடியோ வாயிலாக நிருபர்களுக்கு ப.சிதம்பர் பேட்டியளித்தார். அப்போது ப.சிதம்பரம் கூறும்போது, “இந்திய சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக, இந்திய பொருளாதாரம் மிகவும் மந்தநிலைக்கு சென்றுள்ளது. மைனஸ் 8.6 சதவீதம் என்ற அளவுக்கு பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் வீழ்ச்சி அடையும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.பொருளாதார மந்த நிலையிலிருந்து இந்தியா மீளவேண்டும் என்றால் உடனடியாக 4 விஷயங்களை பின்பற்றுவது நல்லது.
விவசாயிகள் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால் விவசாயிகளில் குறுகிய பகுதியினரே குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுகிறார்கள். அதையும் கூட சமீபத்தில் கொண்டுவந்த விவசாய மசோதாக்கள் கேள்விக்குறியாக்கிவிட்டன.
வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களின் கைகளுக்கு நேரடியாக பணம் சென்று சேராவிட்டால் அவர்கள் பொருளாதாரத்தில் பங்களிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் கையில் பணப்புழக்கம் இருந்தால்தான் சந்தையில் தேவை அதிகரிக்கும். நியாய் போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான நிலையாக உள்ளது.
இதுமட்டுமல்லாமல் இழந்த வேலைவாய்ப்புகளை மறுபடியும் கொடுப்பது அல்லது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. நவம்பர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பின்மை விகிதம், 6.4 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது. இதனிடையே மாநில அரசுகள் 2.7 லட்சம் கோடி அளவுக்கு, மேல் மூலதன முதலீட்டை குறைப்பதற்கு தயாராக உள்ளன. மாநில அரசுகளிடம் கூடுதல் நிதி இல்லாவிட்டால் பணப்புழக்கம் ஏற்படாது. இந்த விஷயங்களை மத்திய அரசு உடனடியாக சரி செய்யவேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.