இம்மாத இறுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தமிழக பொறுப்பாளார் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். அதில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், கட்சி எதிராக பேசுவோர் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதலமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கவும், 3 தமிழக அமைச்சர்கள் மீது விசாரணையைத் தொடரவும் ஜனவரி மாதத்திற்க்குள் சிபிஐ நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், இந்த மாத இறுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தெரிவித்தார். “ராகுல் காந்தி தமிழகம் வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வார். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மற்ற மாவட்டங்களில் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்” என்று கூறினார்.
read more: ரஜினி மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கம் இணைகிறதா?
தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் திமுக தலைமையில் புதிய ஆட்சி அமையும். அதிமுக ஆட்சியாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளினால் அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற பொதுமக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றும் அவர் கூறினார்.