SeithiAlai

தமிழக விவசாயிகள் விருப்பப்பட்டால் மட்டுமே வேளாண் சட்டங்களை பயன்படுத்தலாம்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழக விவசாயிகள் விருப்பப்பட்டால் மட்டுமே வேளாண் சட்டங்களை பயன்படுத்தலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

முதல்வர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். பின்னர், பொதுமக்களையும் சந்தித்து அவர்களது கோரிக்கைகளையும் கேட்டார்.பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

எட்டு வழிச்சாலை
வெளிநாடுகளில் குறைந்தபட்சமே எட்டு வழிச்சாலைதான் உள்ளது. நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சாலை அவசியம். எட்டு வழிச்சாலை நீண்ட கால திட்டம், இப்போது தொடங்கினால் கூட முடிய 6 ஆண்டுகளாகும்.எட்டு வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், நிலம் கையகப்படுத்தியது மட்டுமே மாநில அரசு. விபத்து, கால விரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம்.

விருப்பப்பட்டால் மட்டும்
தி.மு.க. ஆட்சியில் 17 நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் கொண்டு வந்த போது சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா? 3 வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள்? விருப்பப்பட்டால் மட்டுமே வேளாண் சட்டத்தை தமிழக விவசாயிகள் பயன்படுத்தலாம். விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம். பயனளிக்கும் என்பதால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழக அரசு வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version