தமிழ்நாடு – கர்நாடகா பேருந்து சேவை 16-ந் தேதி முதல் தொடக்கம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான பேருந்து சேவை வரும் 16-ந் தேதி முதல் வழக்கம்போல இயங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு – கர்நாடகம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையேயான பொதுப் பேருந்து போக்குவரத்துச் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கடந்த 11-ந் தேதி முதல் வரும் 16-ந் தேதி வரை கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பொதுப் பேருந்து போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தினை தடையின்றி தொடர்ந்து இயக்க தமிழ்நாடு முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துச் சேவையை தொடர பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

16-ந் தேதி
இக்கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பணி நிமித்தமாக பொதுமக்கள் சென்றுவர ஏதுவாகவும், நவம்பர் 16ம் தேதிக்குப் பின்னரும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவையைத் தொடர்ந்து இயக்குமாறு தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version