மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

பல கனவுகளுடன் ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவன் கிஷோர் சரவணன், உக்ரைன் – ரஷ்ய போர் முனையில் எதிர்பாராத விதமாக ஈடுபடுத்தப்பட்ட அந்த மாணவனை, பெரும் முயற்சிக்குப் பிறகு பத்திரமாக மீட்டெடுத்துள்ளார் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அடுத்துள்ள பாளையங்கோட்டை கீழ் பாதியில் வசிப்பவர் சரவணன். இவரது மகன் 23 வயதான கிஷோர். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்பிற்காக சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு எடப்பாடி பகுதியைச் சேர்ந்த நிதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அறையெடுத்து ஒன்றாக தங்கி படித்து வந்தனர். மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பை இருவரும் முடித்துள்ள நிலையில் படிப்பு செலவிற்காக நண்பர்களுடன் சேர்ந்து பகுதி நேர வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளனர். கொரியர் நிறுவனம் ஒன்றில் வேலை இருப்பதை அறிந்த கிஷோரும் நிதீஷும் அந்த வேலைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது வாடிக்கையாளர்களிடம் பொருட்கள் டெலிவரி செய்யும்போது அதில் ரஷ்ய நாட்டில் தடை செய்யப்பட்ட பொருள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரஷ்ய காவல் துறையினர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதுகுறித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பதறி போன பெற்றோர் அவர்களை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து முறையிட்டதுடன் இருவரையும் இந்தியா அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திடீரன ரஷ்ய நாட்டு காவல் துறையினர் அவர்களை உக்ரைன் போருக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்துள்ளனர். வலுக்கட்டாயமாக அவர்களை தனி அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்து அவர்களிடம் ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இதை எடுத்து தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி மாணவர் கிஷோர் பகீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து உக்ரைன் – ரஷ்ய போர் முனையில் எதிர்பாராத விதமாக ஈடுபடுத்தப்பட்ட அந்த மாணவனை, பெரும் முயற்சிக்குப் பிறகு திருச்சி நாடாளுமன்ற எம்.பி. துரை வைகோ பத்திரமாக மீட்டுள்ளார்.

மத்திய அரசுடனும், வெளியுறவுத் துறை அதிகாரிகளுடனும், ரஷ்ய மற்றும் உக்ரைன் தூதரகங்களுடனும் இடைவிடாத பேச்சுவார்த்தை, அசாத்தியத் துணிச்சல்… இவை அத்தனையும் ஒருங்கிணைந்து, ஒரு தாயின் பிரார்த்தனைக்கும், கண்ணீருக்கும் பதிலளிக்கும் விதமாக, நம் மாணவனை மீட்டிருக்கிறார் துரை வைகோ. இது ஒரு தனிநபரின் மீட்பு மட்டுமல்ல, ஒரு தேசத்தின் கடமை உணர்வு! எந்தச் சூழலிலும் தன் மக்களைக் கைவிடாத ஒரு மக்கள் பிரதிநிதியின் அசைக்க முடியாத உறுதி என மாணவனின் பெற்றோரும், பொதுமக்களும் நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version