கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தமிழக அரசு இன்று அனுமதியளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு விளையாட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இடையில் சில ஆண்டுகள் பீட்டா அமைப்பில் எதிர்ப்பு காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல், பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது என்ற முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப (டோடல் சப்சிடி) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
read more:
பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை (தெர்மல் ஸ்கேனிங்) செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.