முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை: சத்திய பிரதா சாஹு

தமிழகத்திற்கு முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சாஹு தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் பதவிக் காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தற்போதே சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் துவங்கிவிட்டன. வரும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ தேர்தல் நடைபெறலாம் என கட்சிகள் எதிர்பார்க்கின்றன.


இதனிடையே தேர்தல் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணைய தலைமை செயலர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு தமிழகத்திற்கு வந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது.திமுக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்க அதிமுக முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்றது. ஆனாலும், தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என உமேஷ் சின்ஹா அப்போது கூறினார்.


இந்த நிலையில் முன் கூட்டியே தேர்தல் நடைபெறலாம் என்ற தகவலுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டார். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சாஹு இன்று மாலை ஆலோசிக்கிறார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், முன்கூட்டிய தேர்தல் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, புதிதாக பல மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட வேண்டும். இதற்கு நிறைய காலம் தேவைப்படும். ஆகவே, முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. உரிய காலத்தில்தான் தேர்தல் நடத்தப்படும் என பதிலளித்தார் சாஹு.

read more: ஆசிரியர்களை துயரத்தில் ஆழ்த்தி முதல்வர் என்னசெய்யப் போகிறார்? ஸ்டாலின் கேள்வி


ஒரு வாக்குச் சாவடியில் 1,000 பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், 67 ஆயிரமாக இருந்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 95 ஆயிரமாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version