பாஜகவின் ‘பி’ டீமா ரஜினிகாந்த்: எல்.முருகன் சொல்லும் விளக்கம்!

பாஜகவின் பி டீமா ரஜினி என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் பதிலளித்துள்ளார்.

ஜனவரி மாதம் அரசியல் கட்சியைத் துவங்கவுள்ளதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான அறிவிப்பை வரும் 31ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் கூறினார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியை நியமனம் செய்தார்.


ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை அர்ஜுன மூர்த்தி பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் தலைவராக இருந்தார். ரஜினி அறிவித்ததற்கு பின்புதான் அவருடைய ராஜினாமா பாஜகவில் ஏற்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து சொன்ன அரசியல் தலைவர்கள், பாஜகவைச் சேர்ந்தவரை ஒருங்கிணைப்பாளராக நியமித்த ரஜினி, பாஜகவின் இன்னொரு முகமாகவே செயல்படுவார் என்று கூறினர்.


இந்த நிலையில் மதுரையில் இன்று (டிசம்பர் 8) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகனிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஜனநாயக முறைப்படி ரஜினி கட்சி துவங்க உள்ளார். ரஜினி தனது சொந்த விருப்பப்படி கட்சி துவங்க உள்ள நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் என எப்படி சொல்ல முடியும் என்று கேட்டார் முருகன். கட்சி ஆரம்பித்த பிறகு ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா என செய்தியாளர் கேட்க, அதனை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யுமெனக் கூறினார்.

Exit mobile version