விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி

100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே இயங்கி வந்தன. பொதுமக்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்பிவிட்டதாலும், கொரோனா குறைந்துவருவதால் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென திரைத் துறையிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.


சில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நடிகர் விஜய், நூறு சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார். விஜய் நடிப்பில் மாஸ்டர், சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் ஆகியவை பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்தார் விஜய்.


எனினும் ஜனவரி மாத தளர்வுகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இதனால் விஜய்யின் கோரிக்கையை முதல்வர் ஏற்கவில்லை என்று பேசப்பட்டது. விஜய்யைத் தொடர்ந்து சிம்புவும் முதல்வருக்கு இதே கோரிக்கையை முன்வைத்தார்.

read more:


இந்த நிலையில் அனைத்து வகையான திரையரங்குகளிலும் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அத்துடன், படம் திரையிடுதலுக்கு முன்பு அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version