ரஜினி மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கம் இணைகிறதா?

ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கம் இணைக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அந்த இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்ததை அடுத்து, அவரது கட்சியின் மேற்பார்வையாளரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் அரசியல் இருந்து விலகுவதாக அறிவித்தார். இறப்பு தழுவும் வரை தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த நிலையில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், கோவை மாவட்ட இயக்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 37 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 85 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் தமிழருவி மணியன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார். இந்தக் கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் அவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதுதொடர்பாக மாநிலப் பொதுச் செயலாளர் பா. குமரய்யா வெளியிட்ட அறிக்கையில், “காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக தமிழருவி மணியன் அவர்கள் தொடர்கிறார். காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 3 லட்சத்திலிருந்து 10 லட்சமாக, அடுத்த ஆறு மாதங்களில் உயர்த்துவதற்கான களப்பணியை இந்த நிர்வாகக் குழு முனைப்புடன் செயல்படுத்தும்” என்று தெரிவித்தார்.

read more: செயற்குழு தீர்மானம்: கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் எச்சரிக்கையா?


நேற்று (10-01) இரவு சில செய்தி காட்சி ஊடகங்களில், காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்தி கற்பனையானது. காந்திய மக்கள் இயக்கம் தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு, சகோதர பாசத்துடன் நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version