புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ஒதுக்கும் தொகை குறைவாக உள்ளது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காரைக்காலில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைத்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
புதிய திட்டம்
புதுச்சேரி மாநிலத்தில், கிராமப்புற மக்கள் சுயதொழில் செய்வதற்கு ஏதுவாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையிலும் தையல் பயிற்சி, கணினிப் பயிற்சி, குழுக்கள் அமைத்து அதன் மூலம் வாகனங்கள் வாங்கி சுயதொழில் செய்வது உள்ளிட்ட பல நிலைகளில் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. வங்கிகள் மூலமும் கடன் உதவி பெற முடியும்.
மழை பாதிப்பு
புதுச்சேரி, காரைக்காலில் மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. விளைநிலம், வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் சுமார் 300 கி.மீ. தூரத்துக்கான சாலைகள் பாதிப்பு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2,800 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிப்பு, குடிசைகள் பாதிப்பு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலை உள்ளிட்ட பாதிப்புகள் எல்லாவற்றையும் கணக்கிட்டு மொத்தம் ரூ.400 கோடி இழப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ரூ.400 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்,
குறைவான நிதி
இடைக்கால நிதியாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர், உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். மத்தியக் குழுவினர், மாநில அரசு அதிகாரிகளுடன் சென்று புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர். அவர்களும் அறிக்கை சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், மத்திய அரசு ஒதுக்கும் தொகை குறைவாகவே உள்ளது. இடிந்த வீட்டுக்கு ரூ.4,000, சாலைகளுக்கு ரூ.1 லட்சம் என்பதெல்லாம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை, தற்போது ரூ.4 கோடி இல்லாமல் சாலை அமைக்க முடியாது.
விதிகளை மாற்ற வேண்டும்
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, விதிமுறைகளை மாற்றித் தொகையை உயர்த்தி, புதுச்சேரிக்கு கணிசமாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். மத்திய அரசிடமிருந்து மிக விரைவில் பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.