முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல், நேரடியாக களத்திற்கு சென்று கொரோனாவை கட்டுப்படுத்தினார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டவிழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு திட்டம்
எந்த ஒரு திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தாலும் அதை செயல்படுத்தாமல் விட்டதில்லை. அந்தளவுக்கு தமிழகத்தின் வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் செயல்படுகிறார். முல்லைப்பெரியாறு திட்டம் சாதாரண திட்டம் இல்லை. அம்ரூத் திட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அம்ரூத் திட்டத்தில் 26 சதவீதம்தான் நிதி ஒதுக்கப்பட்டது. மீதிதொகையை தமிழக அரசும், மாநகராட்சியும் நிதி ஒதுக்கி வழங்கி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
உயிரைப்பற்றி கவலையில்லை
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் அடுத்த 50 ஆண்டிற்கு குடிநீர் பிரச்சனை வராது. கொரோனா காலத்தில் கூட நேரடியாக மக்களை சந்தித்தவர் முதலமைச்சர். அவர் தன்னுடைய உயிரைப்பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அந்த தொற்று நோயை கட்டுப்படுத்தினார்.
உள்ளாட்சித்துறையில் 143 விருதுகளை பெற்று உள்ளோம். அந்த விருதுகளை வாங்குவதற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்தார். இவ்வாறு அவர் பேசினார்.
