குளிர்பானம் என நினைத்து மதுபானத்தை குடித்த குழந்தை உயிரிழப்பு… பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!!

குளிர்பானம் என நினைத்து தவறுதலாக மதுபானத்தை குடித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து மதுக்கடைகளுக்கு எதிராக மீண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பாகுட்டை பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (62) என்னும் கூலி தொழிலாளிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் டாஸ்மாக்கில் இருந்து மதுவாங்கி வந்து தனது வீட்டில் வைத்து அருந்துவது வழக்கம். அப்போது, அவர் வாங்கி வந்த முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை சாப்பிட அவரது பேரன் ரித்திஷ் (5) வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தை தின்பண்டங்கள் சாப்பிடுவதை பார்த்து விட்டு, தான் அருந்தியது போக மீதி மதுவை அங்கேயே கீழே வைத்து விட்டு, உள்ளே டிவி பார்க்கச் சென்றுள்ளார் தாத்தா சின்னசாமி.

அப்போது, மதுபானத்தை குளிர்பானம் என நினைத்து எடுத்துக் குடித்த சிறுவனுக்கு கடுமையான இருமல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த பெற்றோர், தாத்தா சின்னசாமியை கடுமையாக சாடினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னசாமி மற்றும் அவரது பேரன் இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குளிர்பானம் என்று நினைத்து மதுபானத்தை குடித்த குழந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டு அதிர்ந்த மக்கள் மீண்டும் மது விற்பனைக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வேலூர் மாவட்டம் திருவலத்தில் தவறுதலாக மது குடித்த குழந்தையும், தாத்தாவும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மது கொடுமையிலும் கொடுமை; இந்தக் கொடுமைக்கு முடிவே இல்லையா? மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது? மக்கள் நிம்மதியாக வாழ்வது எப்போது?,” என கடுமையாக சாடி கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version