உலகப்புகழ் பெற்ற அர்ஜென்டினா நாட்டு கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு தற்போது மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி வலைவீசியுள்ளது.
மெஸ்ஸி ஆரம்ப காலத்தில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் லீக், லா லிகா கோப்பையில் தோல்வியை சந்தித்ததால் பார்சிலோனாவுக்கும், மெஸ்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளுமாறு மெஸ்ஸி, தனது அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார். அப்படி ஒப்பந்தத்தைத் முறித்துக்கொண்டால் பிரீ டிரான்ஸ்பர் மூலம் வேறொரு அணிக்குச் சென்று விடலாம் என்று மெஸ்ஸி எண்ணினார். இதைத் தொடர்ந்து அப்போது மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி நிர்வாகம் அவரை ஒப்பந்தம் செய்ய தயாராக இருந்தது.
ஆனால் பார்சிலோனாவை விட்டுச் சென்றால் அதற்கு உண்டான தொகையை பார்சிலோனாவுக்கு மெஸ்ஸி செலுத்த வேண்டும் என லாலிகா போட்டி அமைப்பு தெரிவித்தது. இதனால் 2020-2021 சீசனில் பார்சிலோனோ அணிக்காக தொடர்ந்து விளையாட இருக்கிறார் மெஸ்ஸி.
இதையடுத்து 2020-2021 சீசன் முடிந்த பின்னர் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருக்கிறோம் என மான்செஸ்டர் சிட்டி தெரிவித்துள்ளது. இப்போதிருந்தே அதற்கான பணிகளில் அந்த அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. அணிக்கு மெஸ்ஸி வரவுள்ளதால் மான்செஸ்டர் சிட்டி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.