ஆளுங்கட்சியினருக்கு சட்டசபை தேர்தலில் பலமான அடியை மக்கள் வழங்குவார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-
சம்மட்டி அடி
தமிழக மக்களுக்கும், தி.மு.க.வுக்குமான உறவு என்பது மலைக்கோட்டைகளை விட வலிமையானது. மக்களின் நலனுக்காக, நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பாடுபடுவதும், அதற்கேற்ப திமுகவின் கட்டமைப்பை வலிமைப்படுத்துவதும், இடையீடின்றி நடந்து கொண்டே இருக்கிறது. நாம் எடுத்து வைக்கிற அடிதான், ஆட்சியாளர்கள் மீதான சம்மட்டி அடி. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கியதால், அவர்களின் பெற்றோர் படும்பாட்டை உணர்ந்து, அத்தகைய மாணவர்களின் கல்விக்கட்டணத்தை தி.மு.க.வே ஏற்கும் என அறிவிப்பு வெளியாகி, மக்களின் மனதில் பதிவாகி, வரவேற்பைப் பெற்ற பிறகே, கட்டணத்தை அரசு ஏற்கும் என ஆட்சியாளர்களிடமிருந்து திடீர் அறிவிப்பு வருகிறது.
தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர், மற்றொரு பிரம்மாண்டமான பரப்புரைப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில், மகத்தான பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்குவளையிலிருந்து இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தனது பரப்புரையைத் தொடங்கிய நிலையில், உடனடியாக அவரைக் கைது செய்து அற்பத்தனமான அதிகார பலத்தைக் காட்ட முயற்சித்தது.
அரசு விழாவில் பிரச்சாரம்
முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்த எடப்பாடி பழனிசாமி, இத்தனை ஆண்டுகளாக மக்களின் மீது எவ்வித அக்கறையுமின்றி செயல்பட்ட நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அதிகாரிகளைச் சந்திப்பதும், வரவேற்பு என்ற பெயரில் சொந்தக் கட்சிக்காரர்களைத் திரட்டி வருவதும், மக்கள் வரிப்பணத்தில் அரசு விழாக்களை நடத்தி, அதில் அரசியல் செய்து தேர்தல் பிரச்சாரம் நடத்திக் கொண்டிருப்பதையும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக அவர் மேற்கொள்ளும் பயணங்களுக்காக, திரட்டப்படும் கூட்டங்களையும், அதில் கொரோனா பேரிடர் காலத்திற்குரிய எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததையும், பொதுமக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காவல்துறை, தி.மு.க.வின் பரப்புரை பயணத்திற்கு அனுமதி மறுக்கிறது. ஒரு உதயநிதிக்கே இந்த ஆட்சி பயந்துவிட்டதா? தி.மு.க. குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் உதயநிதி போன்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் லட்சோப லட்சமாய், லட்சியக் கொடியேந்தி களத்தில் அடுத்தடுத்து அணிதிரளும்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
ஊழல் குற்றச்சாட்டு
தி.மு.க.வின் வெற்றி மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து உறுதி செய்யப்பட்டிருப்பதை, நம்மைவிட அதிகமாக ஆள்வோர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். நம் மீது அவதூறுகளைப் பரப்ப நினைக்கிறார்கள். திசை திருப்பும் வேலைகளை மேற்கொள்கிறார்கள். அந்த மாய வலைகளை அறுத்தெறிவோம்.
தங்கள் குடும்பத்தினரை உறவினர்களை பினாமிகளைக் கொண்டு அரசு கஜானாவைச் சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.
பலமான அடி
அவர்கள் எத்தனை வித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப்பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.