விஜயகாந்தின் 73 வது பிறந்தநாள் – கேக் வேட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.
மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 73 வது பிறந்தநாளையொட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்தின் படத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிய பிரேமலதா விஜயகாந்த், நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அதன் பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பிரேமலதா விஜயகாந்த், தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் விஜயகாந்தின் இரண்டு மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கேப்டனின் பிறந்தநாளான வறுமை ஒழிப்பு தினம் சென்னை மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கேப்டனின் வழியை நாங்கள் கடைபிடிக்கிறோம். முதல்கட்ட சுற்றுபயணம் மக்களிடையே பேரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் கேப்டன் இல்லம் கட்டி முடிக்கப்பட்டு அங்கு குடியேறுவோம். கேப்டன் ரியல் எம் ஜி ஆராக வாழ்ந்தவர். அதனால்தான் மக்களால் கருப்பு எம் ஜி ஆர் என அழைக்கப்பட்டவர். சினிமாவிலும், அரசியலிலும் கேப்டனின் மானசீக குரு எம் ஜி ஆர் தான். புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு அறிவுரை சொல்ல ஒன்றும் இல்லை. இன்று கேப்டன் இல்லை என்றாலும் தெய்வமாக இருந்து நம்மை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார். 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி இருக்கும் கட்சியாக தேமுதிக உள்ளது. தேர்தலுக்கு தயாராகிக் கொண்டு இருக்கிறோம். கேப்டன் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது கட்சியில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான். அவர் மறைந்தாலும் கட்சியை தற்போது தலை நிமிர வைத்துவிட்டார். 33 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கேப்டனை திரையில் பார்த்தேன். அந்த படத்தை பார்க்கும் போது அவர் உடனான நினைவுகள் வந்தது. அதனால்தான் அவ்வளவு அழுகை. ஒரு மாவீரனுடன் நான் வாழ்ந்தேன் என்ற பெருமையே எனக்கு போதும் என்று தெரிவித்தார்.