தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. இதில் நீட் தேர்வு, கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து குரல் கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சட்டமன்றம் கூடாமல் இருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் தொடங்கி தொடர்ந்து செப்டம்பர் 16 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகின்றது. இந்நிலையில் முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழகத்தில் மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளான செப்டம்பர் 15 அன்று அரசினர் அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்படும் எனவும், செப்டம்பர் 16ம் தேதி முதல் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றப்படும் என முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சட்டமன்ற கூட்டத்தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் திமுக சார்பில் கொரோனா பாதிப்பு, நீட் தேர்வு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரச்சனைகள் குறித்து பேச அனுமதி கோரி கவன ஈர்ப்பு திர்மானம் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதோடு தமிழகத்தில் கடந்த 5 மாதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், அதற்கான நடவடிக்கைகள், செலவுகள், மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் இந்தி திணிப்பு, புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் விவகாரம், அரியர் மாணவர்கள் தேர்வில் உள்ள குளறுபடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சியினர் பிரச்னையை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.