அண்ணா பல்கலைகழகத்தில் புதிய பேராசிரியர்களை நியமிக்கும்போது தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலைகழகத்தில் புதிய பேராசிரியர்களை நியமிக்கும்போது தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்காலிக ஆசிரியர்கள்
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிகமாகவும் நியமிக்கப்படும் பேராசிரியர்களில் பெரும்பாலானோர் திறமையற்றவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற மூடநம்பிக்கைக்கு முடிவு கட்டியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றத்தின் பாராட்டு.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மொத்தம் 1,504 பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், 556 பேராசிரியர்கள் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பேராசிரியர்கள் அனைவரும் மிகக்குறைந்த ஊதியம் பெரும் தற்காலிக ஆசிரியர்கள்.
முன்னுரிமை
அண்ணா பல்கலைக்கழக ஒப்பந்தப் பேராசிரியர்கள் 5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகளாக இதே பணியில் நீடிக்கின்றனர். 6 மாத ஒப்பந்தத்தில் நியமிக்கப்படும் இவர்களை 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், 6 மாதங்களுக்கு ஒருமுறை அவர்களின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களைப் போன்று கணக்குக் காட்டி, பணி நிலைப்பு வழங்க மறுத்து வருகிறது அண்ணா பல்கலைக்கழகம்.
புதிய பேராசிரியர்களை நியமிக்கும்போது, தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.