100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதியளித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கிவந்தன. இந்த நிலையில் விஜய் நடிப்பில் மாஸ்டர், சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் ஆகியவை பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றன. இதனால் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென விஜய், சிம்பு ஆகியோர் முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தனர்.
இதனால் அனைத்து வகையான திரையரங்குகளிலும் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவும் அச்சமுள்ளதால் 100 சதவிகித இருக்கை அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உள் துறை செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதியளிக்கும் உத்தரவு, மத்திய உள் துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அளித்த 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்னும் உத்தரவை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாகக் கூறினார்.
read more: பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரத்தில் இன்னும் சில ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிக்குவார்கள்: ஸ்டாலின்
மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நீர்த்துப் போக செய்யக்கூடாது எனவும், அதனை பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர்,
“100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப புதிய வழிகாட்டு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாஸ்டர் திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.