திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்கள்… நாம் பெருமை கொள்ளவேண்டிய தருணமிது- முதலமைச்சர் ஸ்டாலின்

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வீட்டிற்கு திரும்ப வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் பிற பகுதிகளில் போராட்டம் நடத்திய 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கையில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.

இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்!

மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!

உழவர் பக்கம் நின்று போராடியதும் – வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்!

அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்! என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version