உள்துறை அமித்ஷா மீது பதாகை வீசியதை ஏற்க முடியாது என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூர், காட்பாடியில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
முழுமுயற்சி தி.மு.க.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசுப் பள்ளியில் படித்து உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தி.மு.க. ஏற்கும் என அறிவித்துள்ளார்.
ஏழை, எளிய மக்களுக்கு இருக்கும் கவலையை உணர்ந்து தி.மு.க. இதனை செய்துள்ளது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் உள் ஒதுக்கிட்டில் 7.5 சதவீதம் பெற்றிருக்கிறார்கள் என்றால் இதற்கு முழு முயற்சி எடுத்ததும் தி.மு.க.தான். அரசுப் பள்ளியில படித்த மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார். ஆனால், அரசோ 7.5 சதவீதம் என்று தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார்கள்.
சர்வாதிகாரம்
ஆனால், ஆளுநரும் தீர்மானத்தை கிடப்பில் போட்டதால் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு வேறு வழியில்லாமல் அவர் கையெழுத்திட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். உதயநிதி ஸ்டாலினை கைது செய்து ஹீரோவாக்கி விட்டனர். இது சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்கு அறிகுறி. எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ போகிற இடத்தில் கூட கூட்டம் வருகிறது.
ஏற்கமுடியாது
தமிழகத்துக்கு அமித் ஷா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது. மத்திய அமைச்சராக அவர் வருவது அவரது உரிமை. சென்னையில் அமித் ஷா மீது பதாகை வீசியது யாராக இருந்தாலும் ஏற்க முடியாது. அத்தகைய செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. எதிர்க்கட்சிகள் எப்போதும் குற்றம், குறையைத்தான் சொல்லுவார்கள். ஜெயலலிதா அ.தி.மு.க.வுக்கும், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.