திமுகவின் கூட்டங்களுக்கு தடை: ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

திமுகவின் கிராம சபைக் கூட்டங்கள் இனி மக்கள் கிராம சபை கூட்டங்கள் என்ற பெயரில் நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிமுக ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்தும் வகையில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கடந்த 20ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் நடந்த கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டு பேசினார்.


இந்த நிலையில் திமுகவின் கிராம சபைக் கூட்டங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு. அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், கிராம சபை என்பது அரசியல் சட்டத்தால் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பு. அந்தப் பெயரில் அரசியல் கட்சிகள் நடத்தக் கூடாது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.


இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின். திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சிகளின் ஆய்வாளராக இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடவில்லை. ஏன் ஊராட்சித் தலைவர்களும் அழைப்பு விடவில்லை. இக்கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்பு அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை. ஏன் இக்கூட்டத்தில் எந்த அரசு அதிகாரியும் வந்து பங்கேற்க வேண்டியதில்லை. இது முழுக்க முழுக்க திமுகவின் கிராம சபைக் கூட்டம் என்று விளக்கினார்.


கிராம சபைக் கூட்டம் தொடங்கிய இரு தினங்களிலேயே எடப்பாடி பழனிசாமிக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. கூட்டத்தைப் பார்த்து பதற்றம் அதிகரித்துவிட்டது. எந்தப் பக்கம் போனாலும் – மாநிலம் முழுவதும் அவருக்கு வீசும் எதிர்ப்பு அலைகள் அச்சத்தை ஏற்படுத்திவிட்டன என்றவர்,
சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்று கற்பனை செய்துகொண்டு, திமுகவின் கிராம சபைக் கூட்டத்தைத் தடுக்கிறார்கள்.அதிமுகவிற்கு தைரியமிருந்தால் போட்டிக் கூட்டம் நடத்தி நாங்கள் இவ்வளவு சாதித்துள்ளோம் என்று சாதனையைச் சொல்லலாம் என சவால் விடுத்தார் ஸ்டாலின்.

read more: எம்.ஜி.ஆரை குறை கூறுவதா? சீமானுக்கு வைகோ எதிர்ப்பு!


மேலும், திமுகவின் கிராம சபைக் கூட்டத்தை எக்காரணம் கொண்டும் அதிமுக அரசால் தடுத்து விட முடியாது. பிரச்சாரத்தையும், வழக்குகளையும் காட்டி முடக்கி விட முடியாது. திமுக “கிராம சபை” கூட்டங்கள் இனி “மக்கள் கிராம சபைக் கூட்டம்” என்ற பெயரில் நடத்தப்படும்.திமுகவின் 1700 நிர்வாகிகள் – 16,500 கிராமங்கள்/ வார்டுகளை நோக்கி – மக்கள் சந்திப்பும் பிரச்சாரமும் தொடரும். அதை இந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் மட்டுமல்ல- எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது” என்றும் அறிவுறுத்தினார்.

Exit mobile version