பாஜக-அதிமுக கூட்டணி துடைத்தெறியப்படும்: கே.எஸ்.அழகிரி

சட்டமன்றத் தேர்தலின்போது மோடி மீதான வெறுப்பு வெளிப்பட்டு திமுக கூட்டணி வெற்றிபெறும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் உரையாற்றிய அந்த இதழின் ஆசிரியர் குருமூர்த்தி பா.ஜ.க. இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வளரும் என்று கூறியிருக்கிறார். சிறையிலிருந்து வெளிவரும் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டு தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்று ஆலோசனை கூறியிருக்கிறார்.


இதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனிடம் காசு வாங்கிக் கொண்டு பேசி வருகிறார். நாரதர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். அவர் தன்னை ஒரு கிங் மேக்கர் என்று பில்டப் செய்து வருகிறார் என்று விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து குருமூர்த்தி அ.ம.மு.க.வை இன்னமும் மன்னார்குடி மாபியாவாகத் தான் கருதுகிறேன் என்று கூறி தமது ஆலோசனையைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.


குருமூர்த்தியின் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, துக்ளக் குருமூர்த்தியைப் பொறுத்தவரை அவரது உரை முழுவதுமே ஒரு கோமாளித்தனமான உளறலாகவே அமைந்து விட்டது என்று தெரிவித்தார்.
தேவையில்லாமல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைக் குருமூர்த்தி சீண்டிப் பார்த்திருக்கிறார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., வகுப்புவாத சக்திகளின் ஊதுகுழலாகக் குருமூர்த்தி செயல்பட்டு வருகிறார். தற்போது, பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் கூட்டணியை ஏற்படுத்த அரசியல் தரகராக மாறியிருக்கிறார் என்ற கே.எஸ்.அழகிரி, ஆண்டுக்கு ஒருமுறை துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்கிற குருமூர்த்தி, தமிழக மக்களின் நாடித் துடிப்பை அறிந்திருக்க வாய்ப்பில்லை என விமர்சித்தார்.


தமிழக மக்கள் நேரு பாரம்பரியத்தில் வந்த ராகுல் காந்தியை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சான்றாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் ஜல்லிக்கட்டு குறித்து ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்.


read more: உதயநிதி குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு: கமிஷனரிடம் திமுக புகார்!

ஆனால், 2004 முதல் 2014 வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைபெற்றதையும், பா.ஜ.க. ஆட்சியில் 2015, 16 இல் நடைபெறவில்லை என்பதையும் எவராலும் மறுக்க முடியவில்லை. எனவே, தமிழ் மக்கள் மோடி மீது இருக்கிற வெறுப்பை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படுத்தத் தான் போகிறார்கள். அதனால், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Exit mobile version