நடிகர்களைப் போல வசனம் பேசும் அமைச்சர்கள்: தினகரன் குற்றச்சாட்டு!

எய்ம்ஸ் மருத்துவமனை நிலத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு உடனே ஒப்படைக்க வேண்டுமென தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை ரூபாய் 1, 266 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இரண்டு வருடங்கள் ஆன போதிலும் இதுவரை கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்கவில்லை.


இதுதொடர்பாக தென்காசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இன்னும் இடம் தரவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

read more: கமல்ஹாசன் படத்தைப் பார்த்தால் குடும்பம் காலி: சீறிய முதல்வர்


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் தினகரன், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை பழனிசாமி அரசு முறைப்படி மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
மருத்துவமனை அமைக்கும் பணிகளுக்கான டெண்டரில் மாநில அரசு முடிவெடுக்க விதிகள் அனுமதிக்காது என்பதால், டெண்டர்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் ஆட்சியாளர்கள் இதில் அக்கறை காட்டவில்லையோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்திருக்கிறது என்ற தினகரன்,


“பதவியைவிட கொடுத்த வாக்குறுதியே முக்கியம், ‘முதலமைச்சரைப் பார்த்து கொரோனாவுக்கே பயம் என்றெல்லாம் உலக மகா நடிகர்களைப் போல வாய்கூசாமல் வசனம் பேசும் அமைச்சர்கள் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைத்துரோகம் செய்ய துணிவது சரியா” எனக் கேள்வி எழுப்பினார்.


அத்துடன், இதன்பிறகாவது, மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version