திருக்குவளையில் தடையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகம் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்று திமுக மிகப்பெரிய அளவிலான தேர்தல் பிராசரப் பயணத்தை அறிவித்தது. அதன்படி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரசாரப் பயணத்தை இன்று தொடங்கினார். இதில், ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசியல் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரசாரப் பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் தடையை மீறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் போலீஸாருக்கு எதிராகவும், ஆதிமுக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனிடையே எத்தனை இடையூறுகள் வந்தாலும் தேர்தல் பிராசரத்தை தொடருவோம் என உதயநிதி தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக திமுக எம்பி கனிமொழி அவரது ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சர் எடப்பாடி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் திமுக தலைவர்களோ எங்கும் செல்லக்கூடாது. அடிமை அதிமுக அரசுக்கு திமுகவின் பிரச்சாரத்தின் முதல் நாளே பயம் தொற்றி விட்டது. கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவருடைய பிரச்சார பயணம் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.