காடுவெட்டி குரு வீட்டிற்கு உதயநிதி திடீர் விசீட்!

காடுவெட்டி குரு வீட்டிற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், பாமக தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தற்போது மாவீரன் மஞ்சள் படை அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த அவர், சட்டமன்றத் தேர்தலில் மாவீரன் மஞ்சள் படையின் ஆதரவும், வன்னிய சமூக மக்களின் ஆதரவும் திமுகவுக்கு இருக்கும் என தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

read more: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பில்லை: சொல்கிறார் அண்ணாமலை


அப்போது கடலூர்-அரியலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருக்கும் காடுவெட்டி கிராமத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவரை குருவின் மகன் கனலரசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். குருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உதயநிதி, அவரது தாயாரின் ஆசிபெற்றார். அதன்பிறகு அவரிடம் நலம் விசாரித்துவிட்டு திருமுட்டத்தில் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள கிளம்பினார்.


இதுதொடர்பாக உதயநிதி தனது ட்விட்டரில், அரியலூர்(மா) காடுவெட்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த அண்ணன் காடுவெட்டி குரு அவர்களின் இல்லம் சென்று அவருடைய திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்தேன். அண்ணனின் தாயார் என்னை வாழ்த்திமகிழ்ந்தார். அண்ணனின் மகன் தம்பி கனலரசன் மென்மேலும்வளர வாழ்த்து தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.


சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வன்னியர் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப குருவின் மகனுடன் திமுக நெருக்கம் காட்டுவதாக பாமக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

Exit mobile version