விவசாயப் பேரணியை தடுக்கும் அதிமுக அரசு: வைகோ எச்சரிக்கை!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் பேரணியை தடுக்க அதிமுக அரசு முயல்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில், விவசாயிகள் 33 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். குளிர் உள்ளிட்ட காரணங்களால் போராடிய விவசாயிகளில் 50 பேர் இறந்துவிட்டனர்; ஒரு வழக்கறிஞர் உட்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.


டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில், இன்று மாலை தஞ்சையில் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது.இந்த நிலையில் பேரணிக்குச் செல்லும் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.


போராட்டத்தை தடுக்கும் நோக்குடன், பேரணிக்குப் புறப்பட்டு வருகின்ற விவசாயிகளை, ஆங்காங்கு காவல்துறை வழிமறித்துத் தடுத்துக் கைது செய்கின்றது. விவசாய சங்கத் தலைவர்களின் வீடுகளுக்குச் சென்று, தாய்மார்களைக் காவல்துறை அச்சுறுத்துகின்றது என்று கூறினார் வைகோ.


பெருமாநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளைக் கைது செய்து மண்டபங்களில் அடைத்துள்ளதாக தெரிவித்தவர், சென்னை ஒய்எம்சிஏ திடலில், ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டித் திரட்டி வந்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு உரிய உரிமை, உழுது பயிரிட்டு உணவுப் பொருள்களை விளைவித்து மக்களை வாழ வைக்கின்ற விவசாயிகளுக்கும் உண்டு என விளக்கினார்.

read more: ரஜினிகாந்த் அதிமுகவுக்குதான் ஆதரவு தருவார்: ஜெயக்குமார்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து தஞ்சைப் பேரணிக்குப் புறப்பட்டவர்களையும் கைது செய்து அடைத்துள்ளனர். இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களை ஏவுகின்ற தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, கைது செய்த விவசாயிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்; தஞ்சைப் பேரணியைத் தடுக்கும் முயற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் வினையை விதைத்து வினையை அறுவடை செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார் வைகோ.

Exit mobile version