உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விசிக, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் நின்று வெற்றிபெற்றது. இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற முடிவு செய்து அதற்கான பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது. அதில் கூட்டணி கட்சிகளை தங்களது சின்னத்தில் நிற்க சொல்வதாகவும் தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் ஆங்கில நாளோடு ஒன்றுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், தங்களது சின்னத்தில் திமுக போட்டியிடச் சொல்வதை நாங்கள் அழுத்தமாக பார்க்கவில்லை என்றார்.
தேர்தலுக்கு 10 முதல் 14 நாட்களுக்கு முன்னரே ஒரு சின்னத்தை பெற முடியும் என்னும்போது, அந்த காலத்திற்குள் தனிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் கடினமாக இருக்கும். திமுக சின்னத்தில் போட்டியிடுவது நன்றாக இருக்கும் என்பதால் பரிந்துரையாக அவர்கள் முன்வைத்துள்ளனர். நாங்கள் அதை கருத்தில் கொள்வோம், ஆனால் நாங்கள் எங்கள் தனித்துவத்தை இழக்க மாட்டோம் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
read more: சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்!
தொடர்ந்து பாமக குறித்த கேள்விக்கு, வெற்றி வாய்ப்புக்காக பாமக உள்ளிட்ட பிற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு திமுக யோசிப்பதில் தவறில்லை. ஆனால், பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.