துணை வேந்தர்களின் பணி நீட்டிப்பு தொடர்பான ஆளுநரின் உத்தரவின் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் பதவிக்காலம் முடிவடைந்து, அவர்கள் பொறுப்புகளை ஒப்படைத்து, வழியனுப்பு விழா நடத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக பணி நீட்டிப்பை ரத்துசெய்து புதிய துணை வேந்தர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
இதேபோலவே துணை வேந்தர்கள் பதவி நீட்டிப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸும் சந்தேகம் எழுப்பியுள்ளார். இரு துணைவேந்தர்களும் பல்கலைக்கழக வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களோ அல்லது அப்பழுக்கற்ற பின்னணி கொண்டவர்களோ அல்ல என்று குறிப்பிட்ட ராமதாஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டை முறையை சிதைப்பதில் உயர்கல்வித் துறை செயலாளருக்கு துணையாக இருந்தவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன என சுட்டிக்காட்டினார்.
இத்தகைய பின்னணி கொண்டவர்களுக்கு ஆளுநர் பணி நீட்டிப்பு வழங்க ஆணையிட்டிருப்பதன் நோக்கம், அவர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்பதை விட, வரும் ஏப்ரல் மாதத்தில் ஓய்வுபெறவிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்க முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வைக்க வேண்டும் என்பது தான் என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
ஊழல் புகார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை எதிர்கொண்டு வரும் சுரப்பா, துணைவேந்தர் பதவியில் பணிக் காலத்திற்கு நீடிக்க தகுதியற்றவர் என்பது மட்டுமின்றி, எந்தவொரு துணைவேந்தருக்கும் தன்னிச்சையாக பணி நீட்டிப்பு வழங்குவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை என்றவர், துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ஆளுனர் மாளிகை திரும்பப்பெற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
read more: ஜ
மேலும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்கக்கூடாது. அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அவர் மீதான விசாரணையை முடித்து, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், வழக்குப் பதிவு செய்து, துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு வலியுறுத்தினார்.