இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

தாராபுரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பி.சத்யபாமாவை ஆதரித்து, முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டம்

தாராபுரம் சித்திரவுத்தன்பாளையம்–மாருதி நகர் பகுதியில் இன்று மாலை 3 மணிக்குப் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக தாராபுரம்–உடுமலை சாலையில் சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் பி.சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து விஜய் உரையாற்றுகிறார். கூட்டத்தையொட்டி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்ட 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வர வேண்டாம் என்றும், நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாகப் பார்க்கலாம் என்றும் கட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கர்ப்பிணிகள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கூட்டத்தில் நேரில் பங்கேற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version