இன்னும் மூன்றே மாதங்கள் தான்… வீட்டுத் தலைவிகளுக்கு அமைச்சர் சொன்ன இனிப்பு செய்தி!!

குடும்பத் தலைவிகளுக்கு இன்னும் மூன்றே மாதங்களில் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி அளித்துள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் , முக்கிய அம்சமாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 4 மாதங்களாகியும் இதுவரை அதுகுறித்தான அறிவிப்பு வெளியாக வில்லை. பட்ஜெட்டிலும் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி உள்ளது. அதற்குள் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக தரப்பிலும், அமைச்சர்கள் தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று, 3 மாதங்களில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கடாபுரம், குருவன்மேடு, ஆப்பூர், ரெட்டிப்பாளையம், ஆத்தூர் வேம்பாக்கம் பகுதிகளில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் அமைச்சர் ஈடுபட்டார். பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்படவில்லையே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆட்சியில் தமிழக அரசின் கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டனர். அதனைச் சரி செய்யும் பணியில் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார்.

அதனால் தான் மகளிர் உரிமை தொகையை வழங்க முடியவில்லை. ஒருமாதத்துக்கோ, அல்லது இரண்டு மாதங்களுக்கோ என்றால் உடனே வழங்கிவிடலாம். ஆனால் காலத்துக்கும் வழங்கக்கூடிய திட்டம் இது. எனவே, இதனைச் செயல்படுத்துவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 3 மாதத்தில் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “திமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் தீர்த்து வைக்க முடியும். ஏனென்றால், நமது ஆட்சி என்பதால் எது தேவையென்றாலும் முதல்வரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் சொல்லி அனைவரது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version