தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு அறிக்கை அடிப்படையில் வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ரூ.153.92 கோடி மதிப்பிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் அப்போது தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து ரூ.54.22 கோடியில் 2,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசினார். அப்போது அவர் கூறும்போது,
கன்னியாகுமரி மாவட்டத்தில் 7,911 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. நதிகள் பிரச்சினை தொடர்பாக, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக பிரச்சனைக்கு வல்லுநர் குழு மூலம் தீர்வு காணப்படும்.
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது. உள்ஒதுக்கீடு வேறு, விடுதலை விவகாரம் வேறு. பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக் கேட்பு அறிக்கை அடிப்படையில் வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவை நாங்கள் அறிவிப்போம்.
திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு நாளை முதல் சுற்றுலா படகு சேவை தொடங்கும். கேரளா சென்று திரும்பும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.