வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்… சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எச்சரிக்கை

வங்கக்கடலில் நாளை புதிய புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் நாளை புதிய புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
நாளை புயல்
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பூமத்திய ரேகைப் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் ஏறக்குறைய 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2-ம் தேதி மாலை இலங்கையைக் கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரும். இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழகம்
புயல் இலங்கையைக் கடக்க வாய்ப்புள்ளது. இலங்கையைக் கடந்தபின் குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்பது தற்போதைய நிலை. டிசம்பர் 1 அன்று தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 2 அன்று தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

கனமழை
திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
டிசம்பர் 3 அன்று தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மழை பெய்யும்.

சூறைக்காற்று
கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழகக் கடலோர மாவட்டங்கள், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.
டிசம்பர் 4-ம் தேதியன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
நவம்பர் 30 அன்று தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 1 அன்று தென்மேற்குக் கடல், மன்னார் வளைகுடா கடல், தமிழகக் கடலோரப் பகுதி, கேரளக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
டிசம்பர் 2 அன்று தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா கடல், தென் தமிழகக் கடலோரப் பகுதி, தெற்கு அந்தமான், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயங்களில் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 3 அன்று தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 4 அன்று வங்கக் கடலின் மத்தியப் பகுதி, கிழக்கு அரபிக்கடல், கேரளக் கடலோரப் பகுதி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version