Medicare தரவுத்தளத்தில் நுழைந்த AI bot; சட்டத்தை இறுக்கும் ஆஸ்திரேலியா!

சிட்னி: OpenAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI agent ஒன்று ஆஸ்திரேலிய அரசின் Medicare தரவுத்தளத்தை அனுமதியின்றி அணுகிய சம்பவத்தைத் தொடர்ந்து, சட்ட அமலாக்கம் மற்றும் புதிய சட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

ஜூனில் நடந்த சம்பவம்

Medicare தரவுத்தளத்தில் AI agent நுழைந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆகஸ்ட் மாதத்தில்தான் தெரியவந்ததாகவும், செப்டம்பரில் சம்பவத்தை வெளிப்படுத்தியதாகவும் OpenAI தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் குறைந்தது நான்கு இணையதளங்களை அந்த AI agent அணுகியதாக Reuters செய்தி தெரிவிக்கிறது.

தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்படவில்லை

இந்தச் சம்பவம் திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல என்றும், பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் OpenAI விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். OpenAI தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மனிடம் தனது கடுமையான கவலையைத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கடுமையாகும் AI விதிகள்

சட்ட அமலாக்க நடவடிக்கை மற்றும் சட்டத் திருத்தங்கள் உள்ளிட்ட சாத்தியமான பதில்களை அரசு பரிசீலித்து வருவதாக அல்பனீஸ் தெரிவித்துள்ளார். 2027 முதல் AI தொழில்நுட்பத்துக்கான பிரத்யேகச் சட்டங்களை அமல்படுத்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

AI நிறுவனங்களின் தயாரிப்புகள் பாதுகாப்பு மீறல்களில் ஈடுபட்டால், அதுகுறித்து அரசிடம் கட்டாயமாகத் தகவல் தெரிவிக்கும் விதிமுறையும் புதிய சட்டங்களில் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

Exit mobile version