AI-யால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை முக்கிய ஆலோசனை

நியூயார்க்: வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான DeepSeek உள்ளிட்ட தொழில்நுட்பத் துறை பிரதிநிதிகள் விளக்கமளிக்க உள்ளதாக Reuters தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த மாதம் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சீனாவின் ஏற்பாட்டில் செப்டம்பர் 23-ஆம் தேதி இந்த உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உருவாக்கும் வாய்ப்புகள் மற்றும் அபாயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

DeepSeek-க்கு ஏன் அழைப்பு?

குறைந்த செலவில் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்ற சீன நிறுவனமான DeepSeek, இந்தக் கூட்டத்தில் தொழில்நுட்பத் துறையின் பார்வையை முன்வைக்க உள்ளது.

DeepSeek சார்பில் அதன் ஆராய்ச்சியாளர் சென் டெலி பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கமளிக்க உள்ளதாக இந்த விவகாரத்தை அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி Reuters தெரிவித்துள்ளது.

AI-க்கும் உலகப் பாதுகாப்புக்கும் என்ன தொடர்பு?

செயற்கை நுண்ணறிவு என்பது தற்போது தகவல் தேடல், மருத்துவம், கல்வி அல்லது மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இணையப் பாதுகாப்பு, தவறான தகவல்கள் பரவுதல், ராணுவப் பயன்பாடுகள் மற்றும் தானியங்கி ஆயுத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் AI பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.

இதனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் சர்வதேச பாதுகாப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், அதைக் கட்டுப்படுத்த நாடுகளுக்கு இடையே பொதுவான விதிமுறைகள் தேவையா போன்ற கேள்விகள் ஐ.நா. அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

முதல் முறையல்ல

AI குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதிப்பது இது முதல் முறையல்ல. 2023 ஜூலையில் பிரிட்டன் தலைமையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் முறையான பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது AI உலகப் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் திறனைக் கொண்டிருப்பதுடன், தவறான பயன்பாடு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்துகளை உருவாக்கக்கூடும் என்பதும் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்கா–சீனா தொழில்நுட்பப் போட்டிக்கு மத்தியில் கூட்டம்

AI தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான போட்டி தீவிரமாகியுள்ள நேரத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுவதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக மேம்பட்ட கணினிச் சில்லுகள், AI மாதிரிகள் மற்றும் அவற்றுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே போட்டி நீடித்து வருகிறது.

இந்தச் சூழலில் சீன நிறுவனம் ஒன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேரடியாக AI தொடர்பாக விளக்கமளிப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

என்ன முடிவு எடுக்கப்படும்?

நாளைய கூட்டம் உடனடியாக புதிய சர்வதேச AI சட்டம் அல்லது கட்டுப்பாட்டை உருவாக்கும் கூட்டமாக அறிவிக்கப்படவில்லை. மாறாக செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சியால் உருவாகும் பாதுகாப்புச் சவால்கள் குறித்து உறுப்பு நாடுகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதே முக்கிய நோக்கமாக உள்ளது.

AI தொழில்நுட்பம் மனிதர்களுக்கு வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டே, அதன் தவறான பயன்பாட்டால் உருவாகக்கூடிய சர்வதேச பாதுகாப்பு அபாயங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதே நாளைய விவாதத்தின் மையமாக இருக்கும்.

Exit mobile version