மருத்துவதுறையை சேர்ந்த மூவருக்கு நோபல் பரிசு.. கல்லீரல் தொடர்பான ஆராய்ச்சிக்கு கவுரவம்

2020ம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் விதமாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பிரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 2020ம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த மூவரின் கண்டுபிடிப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஹார்வி ஜே ஆல்டர், மைக்கேல் ஹாஃப்டன், சார்லஸ் ரைஸ் ஆகியோர் கூட்டாக நோபல் பரிசு பெறுகின்றனர்.
ஹெப்பாடைடிஸ் சி வைரசால், கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்கு பரிசு வழங்கப்படுகிறது.

நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. 7ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 8ம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் 12ம் தேதி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.

Exit mobile version