COVID-19 தொற்றுநோயால் உலகளவில் தற்போது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனிதர்களால் ஏற்படும் நில அதிர்வுகளின் சத்தம் பல்வேறு இடங்களில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் மனிதர்களால் இவ்வளவு சத்தம் உண்டாவது தெரியவந்துள்ளது.
2020ம் ஆண்டில் நில அதிர்வு சத்தம் இல்லாத அமைதியான காலம் ஜனவரியின் பிற்பகுதியில் தொடங்கி மார்ச் முதல் மே வரை உச்சத்தை எட்டியது. இதுவரை பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில், மனித நடவடிக்கைகளிலிருந்து நில அதிர்வு மிகக் குறைவாக பதிவாகியுள்ளது இப்போது தான் என தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
உலகெங்கிலும், Seismometer எனப்படும் கருவிதான் நில அதிர்வுகளை அளக்கிறது . பூகம்பங்கள் மட்டுமில்லாமல் கடல் அலைகளின் சத்தம், நிலத்தடி நீர் மூலம் ஏற்படும் அதிர்வு போன்றவற்றையும் பதிவு செய்யும். மேலும் எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கு முன் ஏற்படும் நுட்பமான அதிர்வுகளையும் பதிவு செய்து எச்சரிக்கை விடுக்கும். மனிதர்களால் உண்டாக்கப்படும் அதிர்வுகளான போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் அணி வகுப்புகள் அல்லது கால்பந்து விளையாட்டு போன்றவற்றை கூட அக்கருவிகளால் கண்டறிய முடியும்.
பொதுவாக மனிதர்களால் உண்டாக்கப்படும் அதிர்வுகள் வார இறுதிகளில் குறைவாக இருக்கும். மற்ற நேரங்களில் எப்போதுமே அதிர்வுகள் இருந்துகொண்டே இருக்கும். இதன் காரணமாக இயற்கையாக ஏற்படும் நில அதிர்வை பிரித்து அறிவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இப்போது மனிதர்களால் உண்டாக்கப்படும் நில அதிர்வு பெருமளவு குறைந்துள்ளதால் மிகச் சிறிய அளவுள்ள நில அதிர்வுகளை கூட எளிதாக அறிய முடிகிறது.
உலகெங்கிலும் உள்ள 268 நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களில், 185 நிலையங்கள் மனிதனால் ஏற்படும் அதிர்வு மிகவும் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். முதலில் சீனாவிலும், பின்னர் ஐரோப்பாவிலும், பின்னர் உலகின் பிற பகுதிகளிலும் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதனால் ஏற்படும் இந்த நில அதிர்வு வடிவங்களை அடையாளம் காண்பதன் மூலம் இயற்கையாக ஏற்படும் சத்தங்களில் இருந்து அவற்றை பிரித்தறியலாம். இதனால் எதிர்காலத்தில் நிலநடுக்கம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துல்லியமாக கணக்கிட முடியும். பல சேதங்களையும் இதனால் தவிர்க்கலாம். இந்த ஆய்வின் மூலம் ஏற்பட்டிருக்கும் மற்றோரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், human activities and population dynamics எனப்படும் மனித நடவடிக்கைகள் மற்றும் மக்கள்தொகை இயக்கவியல் குறித்து முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு புரிதல் கிடைக்கும் என நம்புகின்றனர் ஆய்வாளர்கள்.