ஆடி நிறுவனத்தின் ஆர்8 மாடல் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆடி ஆர்8 கிரீன் ஹெல் லிமிடெட் எடிசன் கொண்ட ஸ்பெஷல் மாடல் ஆகும். முன்னதாக பெரும் வெற்றி பெற்ற ஆடி R8 LMS-ன் நினைவூட்டலாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், உலகம் முழுக்க வெறும் 50 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
புதிய ஆர்8 கிரீன் ஹெல் மாடல் விலை 2,33,949 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பீட்டில் 2.01 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது விசேஷமாக அடர் பச்சை நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் ஐபிஸ் ஒயிட், டேடோனா கிரே மற்றும் மைத்தோஸ் பிளாக் உள்ளிட்ட மேலும் மூன்று வண்ணங்களையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
கேபினுக்குள், ஆடி ஆர் 8 கிரீன் ஹெல் ஒரு ஸ்க்ரீன் டச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சொகுசான இருக்கைகள், பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் மற்றும் அல்காண்டரா அப்ஹோல்ஸ்டரி கொண்ட சென்டர் பேனல்களைப் பெறுகிறது. இதற்கிடையில், டாஷ்போர்டு, ஸ்டீயரிங், கதவு ஆர்ம்ரெஸ்ட், முழங்கால் பட்டைகள் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் முழுவதும் காருக்குள் சிவப்பு நிற பினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆடி ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 620 பிஹெச்பி பவர் திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.