மகாபிரபு இங்கயும் வந்துட்டீங்களா.. ஐபிஎல்.,லில் களமிறங்கும் சாமியார்!?

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர் ஷிப்பை கைப்பற்றுவதற்கான முயற்சியில், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இறங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ-யின் பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

இதனிடையே, எல்லையில் இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Vivo, இந்த ஆண்டு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் பார்ட்னராக இருக்காது என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் கடைசி நேரத்தில் புதிய ஸ்பான்சரை தேட வேண்டிய கட்டாயத்திற்கு பிசிசிஐ தள்ளப்பட்டது. அதேசமயம், அமேசான், உன்அகாடமி, ஜியோ, டாடா குழுமம், ட்ரீம் 11, பைஜுஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், திடீரென பதஞ்சலி நிறுவனமும் அம்முயற்சியில் களமிறங்கியுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள பதஞ்சலி நிறுவன செய்தித்தொடர்பாளர் எஸ்.கே.திஜராவாலா, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எடுப்பதற்கு நாங்கள் பரிசீலித்து வருகிறோம், ஏனெனில் பதஞ்சலி பிராண்டுக்கான உலகளாவிய மார்கெட்டிங் தளத்தை ஏற்படுத்த விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ப்ராண்ட் மார்க்கெட்டிங் கோரிக்கையை வைக்க பதஞ்சலி பரிசீலித்து வருவதாகவும் திஜராவாலா தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரிசி, பருப்பு, ஆயுர்வேத மருந்துகள் என பதஞ்சலி கை வைக்காத துறையே இல்லை என கூறப்படும் நிலையில், தற்போது ஐபிஎல் தொடரிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் புதிய ஸ்பான்சர்ஷிப் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்பான்சரிடமிருந்து பிபிசிஐ, அதிகபட்சமாக ரூ. 300 கோடி வருமானம் ஈட்டக்கூடும் என்று Money Control தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version