52 ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த உலகக்கோப்பை வெற்றி; ஜெர்மனியை வீழ்த்திய இந்தியா!

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையில் 5-வது இடம்; ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையில் இந்திய அணி, இரண்டு முறை சாம்பியனான ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதன்மூலம் 1974-ஆம் ஆண்டுக்குப் பிறகு மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையில் இந்தியா தனது சிறந்த இடத்தைப் பதிவு செய்துள்ளது. 1974-ல் நடைபெற்ற முதல் உலகக்கோப்பையில் இந்தியா நான்காவது இடம் பிடித்திருந்தது. ஐந்தாவது இடத்திற்கான ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. மூன்றாவது கால்பகுதியில் இந்தியா அதிரடியாக ஆட்டத்தை மாற்றியது.

43-வது நிமிடத்தில் இஷிகா கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அடுத்த நிமிடத்திலேயே நவ்நீத் கவுர் மேலும் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து நவ்நீத் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்து இந்தியாவின் முன்னிலையை 3-0 என உயர்த்தினார். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஜெர்மனி ஒரு கோல் அடித்தபோதிலும், இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பையில் கிடைத்துள்ள இந்த வெற்றி, அடுத்து நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளை எதிர்கொள்ள இந்திய அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.

Exit mobile version