ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பாண்டிற்காண ஐபிஎல் தொடர், கடந்த 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் 14வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி ஐதராபாத் அணியுடன் மோத உள்ளது. துபாயிக் நடைபெற உள்ள போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இந்த இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 9 முறை வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு தொடரில் இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள், தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முறையே கடைசி இடத்தை பிடித்துள்ளன.
சென்னை தொடரின் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அடுத்த 2 ஆட்டங்களில் மோசமான பேட்டிங் காரணமாக தோல்வி அடைந்துள்ளது. ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கும் வாட்சன்-விஜய் கூட்டணி இதுவரை ஒரு போட்டியிலும் நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை. ரெய்னாவின் இடத்தில் இறங்கிய ராயுடு முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று தந்தாலும், உடல்நிலை காரணமாக கடந்த 2 போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் பிராவோ கடந்த 3 போட்டிகளில் விளையாடவில்லை. இந்த இருவரும் இன்றைய போட்டியில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் பேட்டிங்கில் டூபிளசி மட்டுமே, நல்ல பார்மில் விளையாடி வருகிறார். கேப்டன் தோனி கடந்த 2 போட்டிகளில் முன்னதாகவே களமிறங்கினாலும் அவரது பேட்டிங் சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. ஜாதவ், ஜடேஜா போன்றோரின் பேட்டிங்கும் அதே நிலையில் தான் உள்ளது.
பந்துவீச்சில் சாஹர் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், நிகிடி, சாம் கார்ரன் ஆகியோர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. பியூஸ் சாவ்லா ஒருபுறம் விக்கெட்டுகளை எடுத்தாலும், மறுபுறம் ரன்களை வாரிக் கொடுத்து வருகிறார். தோனி தலைமையிலான சென்னை அணியில் எல்லா விதத்திலும், பல பிரச்னைகள் இருக்க, கடந்த ஒரு வார காலமாக அவர்களுக்கு கிடைத்த ஓய்வு மனதளவில் வெற்றிக்காக போராட வீரர்களை தயார்படுத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டிகளில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இன்றைய போட்டியில் வென்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் எனும் மோசமான நிலையை சென்னை அணி தவிர்க்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.
மறுபுறம் தொடரின் முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும், கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றனர். கடந்த வருடம் போல் இல்லாவிட்டாலும், வார்னர்-பேர்ஸ்டோ கூட்டணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் தரத்திற்கான ஆட்டத்தை வெளிபடுத்துவதில் அவர்கள் சற்று திணறி வருகின்றனர். மணிஷ் பாண்டே இந்த தொடரில் இதுவரை பெரிதாக சோபிக்காத நிலையில், கடந்த போட்டியில் களம் கண்டா வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இன்றைய போட்டியிலும், அவர் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.
பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷீத் கான், நடராஜன் சிறப்பாக செயல்பட்டு வருவது சென்னை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். இரு அணிகளும் போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற முனைப்பு காட்டுவதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.