பெருமை சேர்க்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளதாக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
சேலம் :
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முதன் முதலாக இடம்பிடித்த இவர், முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டிக்கு வந்த அவருக்கு, ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர வைத்து அவரது வீடு வரைக்கும் ஊர்வலமாக அழைத்து சென்றனர். செண்டை மேளம் முழங்க, பட்டாசு மற்றும் வாண வேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடராஜன் :
“ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இந்திய அணியில் அனைவரும் பாகுபாடின்றி ஆதரவளித்தனர். ஆஸ்திரேலியா தொடரில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த நினைத்தேன். ஆஸ்திரேலிய வீரர் வார்னர் முழு ஆதரவளித்தார், பாராட்டினார். கடந்த 4 ஆண்டுகள் ஐபில் அனுபவம், சர்வதேச போட்டிகளில் உதவியாக இருந்தது.
என்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவுபோல் இருந்தது. ஆஸ்திரேலியாவில் வெற்றிக் கோப்பையை கையில் ஏந்திய தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. கடின உழைப்பு என்றுமே வீண் போகாது. நிச்சயம் உயர்த்தும். சேலத்தில் இருந்து பல வீரர்கள் இந்திய அணிக்கு கிடைப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு முழு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி” என்று அவர் கூறினார்.