சுரேஷ் ரெய்னா அணிக்கு திரும்புவதைப் பற்றி நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை என, சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் தொடக்கத்தில் எப்போதும் அதிரடியாக ஆடி வெற்றிகளை குவித்து பிளே ஆப் வரை செல்வதை உறுதிப்படுத்திவிட்டு, அதன்பின் அணிக்குள் பல மாற்றங்களை செய்து சோதித்து பார்ப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழக்கம்.
ஆனால் இந்த முறை தொடக்கத்திலேயே சென்னை மோசமாக சொதப்ப தொடங்கி உள்ளது. மும்பைக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் மட்டும் வென்ற நிலையில், டெல்லி மற்றும் ராஜஸ்தானுக்கு எதிராக சென்னை தோல்வி அடைந்துள்ளது.
சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங் ஆர்டர் மட்டுமே காரணமாகி உள்ளது. ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடவில்லை. ராயுடு காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். சி.எஸ்.கேவில் டு பிளசிஸ் மட்டுமே அதிரடியாக ஆடி வருகிறார்
சென்னை அணி தற்போது ரெய்னா இல்லாமல் மிக மோசமாக கஷ்டப்பட்டு வருகிறது. ரெய்னாவிற்கு மாற்றாக வந்த ரூத்துராஜ் சரியாக ஆடுவது இல்லை. ஒருவேளை அணியில் ரெய்னா இருந்திருந்தால் கண்டிப்பாக சி.எஸ்.கே இவ்வளவு திணறி இருக்காது என ரசிகர்கள் கருதுகின்றனர்.
ரெய்னா இல்லாமல் சென்னையின் பேட்டிங் ஆர்டர் மிக மோசமாக உள்ளதால், ரெய்னாவை மீண்டும் அணிக்குள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதற்காக தற்போது டிவிட்டரில் சி.எஸ்.கே ரசிகர்கள் ரெய்னாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரெய்னா அணிக்கு திரும்புவது குறித்து, சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதவது, சென்னை அணிக்கு ரெய்னா திரும்புவதை பற்றி நாங்கள் இதுவரை சிந்திக்கவில்லை. தாயகம் திரும்பியது அவரது சொந்த விருப்பம். அணியில் நல்ல வீரர்கள் உள்ளனர். ஆட்டத்தில், சில மோசமான நாட்கள் வரத்தான் செய்யும். சென்னை அணி அதிலிருந்து மீண்டு வரும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரெய்னா மீண்டும் வந்தால் அவரை ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தில் சி.எஸ்.கே இல்லை என்றும், சி.எஸ்.கே ஓனர் ஸ்ரீனிவாசன் மற்றும் ரெய்னா இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இனி சி.எஸ்.கேவில் ரெய்னா இணைய வாய்ப்பு இல்லை என்றும் ஐ.பி.எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அணி நிர்வாகத்துடன் மோதலில் ஈடுப்பட்டதன் காரணமாக கோபத்தில் உள்ள தோனி, ரெய்னா அணிக்குள் மீண்டும் வருவதை விரும்பவில்லை எனவும்,
ரெய்னா இல்லாமல் வென்று காட்ட முடியும் என்று தோனி நிரூபிக்க பார்ப்ப்பதாகவும் கூறப்படுகிறது. சி.எஸ்.கே மோசமாக தோல்வி அடைந்தாலும் கூட, கண்டிப்பாக ரெய்னா அணிக்குள் மீண்டும் வர மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.