சென்னையின் பேட்டிங் தூணிற்கு காயம்?..மீண்டும் தோனி படைக்கு பின்னடைவு

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள வீரருக்கு ஏற்பட்டுள்ள காயம், அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியில் மும்பையை விழ்த்தி வெற்றிகரமாக தொடங்கினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் மோசமான பேட்டிங் காரணமாக சென்னை அணி தோல்வியை தழுவியது.

ஒருவழியாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், அசத்தலான பேட்டிங் மூலம் சென்னை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது. வெற்றி, தோல்வி என நடப்பு தொடரில் சென்னை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடியவர் டூபிளசி. இதுவரை 282 ரன்களை குவித்து, ஆரஞ்சு கேப் போட்டிப் பட்டியலில், அவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில், தொடரின் இரண்டாவது போட்டியில் அவருக்கு காலில் லேசான தசைபிடிப்பு ஏற்பட்டது. அதனால் அதற்கடுத்த போட்டிகளில் அவர் சரியாக ஓடமுடியாமல் விளையாடி வருகிறார். இந்நிலையில் கடைசி போட்டியில் அந்த காயத்தால் வலி மேலும் அதிகமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் கொல்கத்தா அணிக்கு எதிரான நாளைய போட்டியில் டூபிளசி விளையாடுவாரா என்பது சந்தேகம் என சொல்லப்படுகிறது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் தூணாக இருக்கும் டு பிளசிஸ் விளையாடாமல் போனால் அது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

Exit mobile version