சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் என்பதையும் தாண்டி, தலைவன் என்பவன் அணியை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்து சர்வதேச அளவில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் கேப்டன் கூல் தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எந்தவொரு கேப்டனுக்கும் இல்லாத பெருமையாக, ஐசிசி தொடரின் அனைத்து கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தவர் தோனி.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற தோனி, அரையிறுதியில் தோல்வியுற்று இந்தியா வெளியேறிய பிறகு எந்தவொரு சர்வதேச போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார்.
இதையடுத்து, அவர் ஓய்வு பெற உள்ளதாக பல தகவல்கள் வெளியானாலும், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டீ20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தனக்கே உரிய பாணியில் யாரும் எதிர்பாராத விதமாக எந்தவித சலனமும் இன்றி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இத்தனை ஆண்டுகளாய் நீங்கள் காட்டிய அன்புக்கும், அளித்த ஆதரவுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவின் பின்னணியில், main pal do pal என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. 40 வயதை நெருங்கியுள்ள தோனியின் இந்த திடீர் முடிவு ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.