ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா வருத்தம்… ‘தலைமகனே கலங்காதே’

தேசிய கொடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்ததை எண்ணி மிகவும்  ஏமாற்றம் அடைந்தேன் என ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 22பேர் கொண்ட இந்திய தடகள அணி நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். பின் இறுதிபோட்டியின் போது காயம் ஏற்பட்டதால் அவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்தார். இந்த செய்தி ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நீரஜ் சோப்ரா வெளியிட்டுள்ள பதிவில், “எனது பட்டத்தை தக்க வைக்க முடியாமல் போனதும், நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை இழந்ததும் வருத்தம் அளிக்கிறது. இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை  நினைத்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த வாய்ப்பை இழந்ததை எண்ணி மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இன்னும் சில தினங்களில் காயங்களில் இருந்து விடுபட்டு களத்திற்கு வருவேன் என நம்புகிறேன்.கடந்த சில நாட்களாக நான் பெற்ற அனைத்து அன்புக்கும், ஆதரவுக்கும் முழு நாட்டிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version