செஸ் ஒலிம்பியாட் போட்டி 8வது சுற்றிலும் இந்திய அணி வெற்றிபெற்றது.
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியின் 8வது சுற்றில் இந்திய ஓபன் பி அணி பலம் வாய்ந்த அமெரிக்க அணியை வீழ்த்தியது. தமிழக வீரர் குகேஷ் அபாரமாக விளையாடி 8வது வெற்றியை உறுதிசெய்தார்.
இந்திய ஏ அணி அர்மேனியா அணியுடன் மோதியது. இதில் விதித் சந்தோஷ், அர்ஜூன், நாராயணன் ஆகியோர் போட்டியை டிரா செய்தனர். மகளிர் ஏ பிரிவில் உக்ரைன் அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி, கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவள்ளி, தன்யா சச்தேவ் ஆகியோர் டிரா செய்தனர்.
இந்திய ஓபன் பி பிரிவில் தமிழக வீரர் குகேஷ், சத்வானி இருவரும் அமெரிக்க வீரர்களை தோற்கடித்து தலா ஒரு புள்ளியை பெற்றனர். அப்பிரிவில் பிரக்ஞானந்தா சரின் நிகலுடன் விளையாடி போட்டியை சமன் செய்தார்.
இந்திய ஓபன் சி பிரிவில் பெரு அணிக்கு எதிராக விளையாடிய, தமிழக வீரர்களான சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோர் போட்டியை டிரா செய்தனர். இதேபோல் மகளிர் சி பிரிவில் போலந்து அணிக்கு எதிராக விளையாடிய ஈஷா, விஷ்வ வஸ்னாலா டிரா செய்தனர்.
செஸ் ஒலிம்பியாட்டில் மொத்தம் 11 சுற்றுகள் நடைபெறும். இதில் அதிக சுற்றுகளில் வெற்றிபெறும் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.