செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பை ஒத்திவைத்தேன் ஹரிகா துரோணவல்லி உருக்கமான பதிவு

செஸ் ஓலிம்பியாட் போட்டிக்காக எனது வளைகாப்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்தேன் என்று ஹரிகா துரோணவல்லி உருக்கமாக கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் அணியில் ஹரிகா துரோணவல்லியும் ஒருவர். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். சொந்த மண்ணில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக உடல்நிலையை பொருட்படுத்தாமல் கலம் இறங்கி விளையாடினார். 7 சுற்றுகளில் ஆடிய அவர் அனைத்து போட்டியிலும்  டிரா செய்தார்.

வெண்கல பதக்கத்தை வென்ற பின் ஹரிகா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்திய செஸ் அணிக்காக எனது பயணம் 18 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது எனது 13வயதில் தொடங்கியது. இதுவரை 9 செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடிவிட்டேன். இந்திய பெண்கள் அணிக்காக பதக்க மேடையில் ஏற வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அந்த கனவு இப்போது  நிஜமாகி இருக்கிறது. நான் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சூழலில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் உணர்வுபூர்வமானது.

எனது டாக்டர் எந்த சிக்கலும் இன்றி தொடர்ந்து உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் இந்த போட்டியில் விளையாடுவது சாத்தியம் என்று கூறினார். அதன்பிறகு எனது சிந்தனை, செயல் எல்லாமே ஒலிம்பியாட்டில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் ஐக்கியமானது. அதற்காக ஒவ்வொரு அடியையும் முழு அர்ப்பணிப்போடு எடுத்து வைத்தேன்.  வளைகாப்பு, கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம். எல்லாமே பதக்கம் வென்றபிறகுதான் என தீர்க்கமாக முடிவெடுத்தேன். இந்த தருணத்திற்காகதான் காத்திருந்தேன்.வரலாற்றில் முதல்முறையாக இந்திய பெண்கள் அணி பதக்கத்தை உச்சிமுகர்ந்து விட்டது” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Exit mobile version